மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி புஷ்பா கனேதிவாலா, சமீப நாட்களில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி இந்திய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானவர்.
அவருடைய சர்ச்சை தீர்ப்புகள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தன. குறிப்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, ‘’உடலுறவும் தோலோடு தோல் இணைந்தால் மட்டுமே வன்கொடுமை அத்துமீறலாகும்’’ என தீர்ப்பளித்தார். மற்றொரு வழக்கில், “சிறுமியின் கையைப் பிடித்து இழுப்பதும், பேண்ட் ஜிப் திறந்திருப்பதும் வன்கொடுமை அத்துமீறலாகாது ’’ என்று கூறியிருந்தார்.
இதேபோல் ஒரு வன்புணர்வு வழக்கில், “வன்கொடுமை செய்திருந்தாலோ இருவருக்குள்ளும் மோதல் வெடித்திருக்கும். அப்படியிருந்தால் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், வழக்கு தொடுத்துள்ள பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இல்லை. இருவரின் விருப்பத்தின் பேரிலேயே குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது’’ என்று கூறி சிறை தண்டனை பெற்று வந்த நபரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி புஷ்பா.
இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் தேசிய அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது, நாடு முழுக்க சமூக செயற்பாட்டாளர்களும் பெண்கள் அமைப்பினரும் கண்டனங்களை எழுப்பிய நிலையில், அவர் கூறிய அந்த தீர்ப்புகளுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். மேலும், உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக புஷ்பாவை நியமிக்க பரிந்துரைத்திருந்த உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம், தனது பரிந்துரையை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இது குறித்தெல்லாம் நீதிபதி புஷ்பா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், வரதட்சனை கொடுமை வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட ஒரு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு புஷ்பாவிடம் விசாரணைக்கு இன்று வந்தது. வழக்கை விசாரித்த அவர், “ஐ.பி.சி. சட்டப் பிரிவு 498-ன் படி வரதட்சனைக் கேட்பது துன்புறுத்தல் ஆகாது’’ என கூறி குற்றவாளியை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார் புஷ்பா கனேதிவாலா. இந்தத் தீர்ப்பும் தற்போது சர்ச்சையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.