கேரளாவில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் கேரளா அரசு ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதற்காக கேரள மாநிலம் வைக்கம் பகுதிக்கு சென்ற முதல்வருக்கு கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் வைக்கம் போராட்ட வீரர்கள் சிலைகள் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்வின் மேடையில் பேசிய தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின், “சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வந்தாலும் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். இந்தியாவிற்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம். உடல் வேறு என்றாலும் எனக்கும் பினராயி விஜயனுக்கும் சிந்தனை ஒன்றுதான். தன்னுடன் நட்பு கொண்டிருந்த மன்னருக்கு எதிராகவே பெரியார் போராடினார். வைக்கம் போராட்டத்தில் தடையை மீறி பேசியதற்காக பெரியாருக்கு சிறை தண்டனை விதித்தார்கள். விடுதலை செய்யப்பட்ட பிறகும் நேராக ஊருக்கு திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார். மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
தந்தை பெரியாருக்கு என்ன சிறப்பு என்றால் இந்த போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியாரை மிகவும் மோசமாக நடத்தினார்கள். கையிலும் காலிலும் விலங்கு போட்டு கழுத்தில் மரப்பலகை மாட்டி அடைத்து வைத்திருந்தார்கள். மொத்தம் 141 நாட்கள் இந்த போராட்டத்திற்காக தன்னை பெரியார் ஒப்படைத்துக் கொண்டார்'' என்றார்.