Skip to main content

துரை வைகோவின் கேள்வி... ரயில்வே துறை அமைச்சரின் வித்தியாசமான பதில்!

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
Vaiko questions about concession in railway fares for senior citizens and journalists
கோப்புப்படம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி (25.11.2024) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அந்த வகையில் இன்று அவை கூடிய போது, மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ மூத்த குடிமக்களுக்கும், பத்திரிகையாளருக்கும் வழங்கி வந்த ரயில் கட்டண சலுகை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அளித்த பதிலையும், துரை வைகோவின் கருத்தையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில், “இன்று (04.12.2024) நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்று கேள்வி எழுப்பினேன். அதற்கு இரயில்வே அமைச்சர் பதில் அளித்தார்கள். அதுபற்றிய எனது விரிவான கருத்தை பதிவிடுகிறேன்.

எனது கேள்வி: சபாநாயகர் அவர்களே, மூத்த குடிமக்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இரயில் கட்டண சலுகை, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது.  அந்த சலுகை இரண்டு ஆண்டுகளாகியும் மீண்டும் தொடங்கப்படவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கடந்த ஜூலை 31ஆம் தேதி உங்கள் முன் இந்தப் பிரச்னையை எழுப்பியிருந்தேன். அந்த சலுகையை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து மாண்புமிகு ரயில்வே அமைச்சரிடம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 

ரயில்வே அமைச்சர் அவர்களில் பதில்: சபாநாயகர் அவர்களே, நான் முன்பே குறிப்பிட்டது போல், மீண்டும் இதை தெளிவுபடுத்துகிறேன். இந்திய இரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் இந்திய அரசு வழங்கும் மொத்த மானியம் 56 ஆயிரத்து 993 கோடி ரூபாய் ஆகும். ஒரு பயண சேவை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாயாக இருந்தால், ​​பயணசீட்டுக்கு ரூ. 54 மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு பயணிக்கும் 46% மானியம் வழங்கப்படுகிறது, இதில் மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிடும் அனைத்து பிரிவினர்களும் அடங்கும் என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எனினும் அவருடைய கூற்று குறித்த உண்மை நிலையை அறிய முற்பட்டபோது கூடுதல் அதிர்ச்சி அடைந்தேன். ஆம், அமைச்சர் சொன்னதுபோல கொரோனா காலத்திற்கு பிறகு இரயில்வே கட்டணத்தில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. 

உதாரணத்திற்கு கொரோனா தொற்று காலத்திற்கு முன் ஒரு நபர் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை மலைக்கோட்டை விரைவு இரயிலில் பயணம் செய்ய இரண்டாம் வகுப்பு கட்டணமாக ரூபாய் 255 செலுத்தவேண்டும். அப்போது மூத்த குடிமக்களில் (பெண்களுக்கு) சலுகை கட்டணமாக ரூ.155,  மூத்த குடிமக்களில் (ஆண்களுக்கு) சலுகை கட்டணமாக ரூ.175 மட்டுமே வசூலிக்கப்பட்டது.

இன்றைய தேதியில் அந்த சலுகை கட்டணம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் சாதாரண பயணிகளுக்கு அமைச்சர் குறிப்பிட்டது போல எந்த கட்டண குறைப்பும் இல்லை. ஒருவர் திருச்சியில் இருந்து சென்னை செல்ல மலைக்கோட்டை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு  கட்டணமாக  அன்றும் இன்றும் ஒரே கட்டணமாக ரூ.255 செலுத்தவேண்டும். அதுபோலவே அனைத்து வகுப்பு பயண கட்டணத்திலும் எந்த வித மாற்றமும் இல்லை.

என்னை பொறுத்தவரை மூத்த குடிமக்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்பட்டுவந்த கட்டண சலுகை, சலுலையே அல்ல. அது அவர்களின் உரிமை. அதை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.  பெருமைக்குரிய மூத்த குடிமக்களின் அர்பணிப்பு இல்லாமல் இந்த நாடும், இந்த நாட்டில் உள்ள எந்த ஒரு வீடும் உருவாகியிருக்க முடியாது.

அவர்கள் தங்களின் பயணத் தேவைக்கு அரசு இது நாள் வரை வழங்கி இருந்த சலுகையினால் பிள்ளைகளிடம் கையேந்தாமல் சுயமரியாதையுடன் வாழ்ந்து வந்தார்கள். அதை கொரோனா, ஊரடங்கு உள்ளிடவற்றை காரணம் காட்டி நிறுத்தி வைத்துவிட்டு, இப்போது மீண்டும் அந்த சலுகைகளை கொண்டு வராமல் தவிர்ப்பது மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய இந்த நாட்டின் மூத்த குடிமக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு செய்யும் துரோகமாகவே நான் கருத வேண்டியுள்ளது.

அதுபோலவே அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அதிகமாக பயணம் செய்ய வேண்டிய தேவை உடையவர்கள். அவர்களுக்கு பெரிதாக சம்பளம் வழங்கப்படாத நிலையிலும் சேவை மனப்பான்மையுடன் இயங்கும் அவர்களுக்கும் இரயில்வே கட்டண சலுகை நிறுத்தப்பட்டது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறை மீது ஒன்றிய பாஜக அரசு கொண்டுள்ள எதிர்மறை எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.

வருத்தத்துடன் நான் பதிவு செய்கிறேன். இன்றைய அவையில் இரயில்வே அமைச்சரின் பதிலை பார்த்தால் மூத்த குடிமக்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் நிறுத்திவைக்கப்பட்ட இரயில்வே பயண கட்டண சலுகை இனி ஒருபோதும் மீண்டும் வழங்கப்படாது என்பதையே உணர முடிகிறது. இன்று அவையில் நடந்த கேள்வி பதில் குறித்த முடிவை ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான பொதுமக்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்