உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது எனக் கூறி சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீசார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அச்சமயத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கடந்த 24ஆம் தேதி ஜமா மசூதிக்கு ஆய்வுக் குழு சென்றடைந்தது. அப்போது ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இந்த மோதலில் வாகனங்கள் எரிப்பு போன்ற பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜியா உர்ரஹ்மான் பர்க், சமாஜ்வாதி எம்.எல்.ஏ இக்பால் மஹ்மூத் மகன் சோஹைல் மஹ்மூத் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று (04.12.2024) சென்றனர். அப்போது ராகுல் காந்தி சென்ற கார் மாநில காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் சம்பல் பகுதிக்குச் செல்ல முயன்றோம். ஆனால் போலீசார் எங்களைத் தடுக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்களைச் சந்திப்பது எனது அரசியல் சாசன உரிமை. ஆனால் அவர்கள் என்னைத் தடுக்கிறார்கள். நான் போலீசாருடன் தனியாக செல்ல முன்வந்தேன், ஆனால் அவர்கள் அதற்கும் மறுத்துவிட்டனர். சில நாட்களுக்குப் பிறகு திரும்ப வருமாறு கூறுகிறார்கள். இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள புதிய இந்தியா இது. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று கூறினார்.