2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் சூழலில், அனைத்து மாநிலங்களும் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கரோனா பாதிக்கப்பட்டுக் குணமான ஒருவர் எப்பொழுது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்குத் தேசிய மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை ஒன்றை வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே அடுத்த டோஸ் அதாவது, இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்று மாதங்கள் வரை தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும்" என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா அல்லாது வேறு தீவிர பாதிப்புக்குச் சிகிச்சை பெறுவோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை 4 வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.