![uttrapradesh train incident rs 20](http://image.nakkheeran.in/cdn/farfuture/0fHCADjIRBvuvr-TVwSXCAy_9d48w-u-3J1nTy8cO6o/1671275867/sites/default/files/inline-images/995_169.jpg)
வெறும் 20 ரூபாய் பணத்திற்காக இளைஞரை அடித்துத் துன்புறுத்திய சம்பவத்தில் அவமானம் தாங்க முடியாமல் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா பகுதிக்கு அருகே உள்ளது மோதிகஞ்ச் ரயில் நிலையம். அதே பகுதியைச் சேர்ந்தவர் சோட்டு என்கிற சலீம். இவர், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி இரவு 8 மணியளவில் மோதிகஞ்ச் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பஜார் பகுதிக்குச் சென்றுள்ளார். சலீம் தன்னுடைய வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்குள்ள உள்ளூர் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவர் வாங்கிய பொருட்களுக்கு 20 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த கடைக்காரர் சலீமிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சக கடைக்காரர்களும் பொதுமக்களும் சலீமை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அவரை, நடுரோட்டில் வைத்து சட்டையைக் கிழித்து பயங்கரமாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சலீம் அவமானம் தாங்க முடியாமல் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தகவலறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சலீமின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். அதே வேளையில், வெறும் இருபது ரூபாய்க்காக ஒரு நபரை ஈவு இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்திய காட்சிகளும் அந்த நபர் அவமானம் தாங்க முடியாமல் ரயிலில் பாய்ந்த காட்சிகளும் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் உத்தரப்பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.