உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் புதிதாக பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று (19.04.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "உத்தரப்பிரதேசத்தில் தற்போது ரவுடி, மாபியா கும்பல் மற்றும் குற்றவாளிகள் யாரும் செல்போன் மூலம் தொடர்புகொண்டு தொழிலதிபர்களை மிரட்ட முடியாது. ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசம் வன்முறைகளுக்கு பெயர்போன இடமாக திகழ்ந்தது. சில மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது பயப்படத் தேவையில்லை. உத்தரப்பிரதேசத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஒரு ஊரடங்கு உத்தரவு கூட பிறப்பிக்கப்படவில்லை. அதற்கான சூழ்நிலைகளும் ஏற்படவில்லை. அதனால் உத்தரப்பிரதேசத்தில் தொழில்கள் தொடங்கி முதலீடுகள் செய்வதற்கு சாதகமான வாய்ப்புகள், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு உத்தரப்பிரதேசம் உத்தரவாதம் அளிக்கிறது" எனப் பேசினார்.