உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிகூடல் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். அதுபோல இடையில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா என்று நடக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் அரை கும்பமேளா விழா கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 49 நாட்கள் நடைபெறும் கும்பமேளா விழா மார்ச் மாதம் 4-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதில் 15 கோடி பேர் பங்கேற்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடிக்கு மேல் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மௌனியா அமாவசையான திங்கள்கிழமை வரை கூட்ட நெரிசலில் சிக்கி 50 ஆயிரம் பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. உறவினர்களை தொலைத்த பலர் அந்த பகுதிகளிலேயே அமர்ந்து கதறி அழுதபடி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 300 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.