குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தின் போது சேதப்படுத்தப்பட்ட அரசு வாகனங்களுக்கு இஸ்லாமியர்கள் இழப்பீடு வழங்கிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு இந்தியா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில், உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்தசாஹர் மாவட்டத்தில் உள்ள உபர்கோட் பகுதியில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசு வாகனங்கள், ஜீப்கள், கார்கள், பேருந்துகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன.
இந்த வன்முறை தொடர்பாக புலந்த்சாஹர் போலீஸார் 22 அடையாளம் தெரிந்த நபர்கள், 800 அடையாளம் தெரியாதவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தார்கள். இந்நிலையில், இந்த வன்முறை சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடாக அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து ரூ.6 லட்சம் திரட்டி, அதற்கான காசோலையை மாவட்ட அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.