மாடுகளை கடத்திய மூன்றுபேர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
நேற்று நள்ளிரவில், ஹப்பூர் மாவட்ட எல்லை அருகே சவ்னானா கிராமத்தில் இருந்து மாடுகள் கடத்தப்படுவது குறித்த ஜார்சா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஹப்பூர் மாவட்ட எல்லை அருகே சந்தேகத்திற்கிடமான பிக்-அப் வாகனம் ஒன்றை விசாரிப்பதற்காக போலீஸார் நிறுத்தியுள்ளனர். ஆனால் அதிலிருந்தவர்கள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர். போலீஸாரும் இதற்கு பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், மேலும் மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது, ஒரு மாடு, ஒரு எருமை, மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டதாகவும். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.