குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் செய்து ட்வீட்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டிச.15 ஆம் தேதி டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதன் பிறகு நாடு முழுவதும் பெருமளவு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை நடைபெற்றது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளால் 21 பேர் பலியாக, சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தோரின் சொத்துக்களை முடக்கி நஷ்டஈடு பெற நடவடிக்கை எடுத்து உத்தரபிரதேச அரசு. அதன்படி, இதுவரை 372 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் செய்த ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அலுவலகம் செய்த அந்த ட்வீட்டில், "ஒவ்வொரு கலவரக்காரரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒவ்வொரு போராட்டக்காரரும் கலங்கிப் போயுள்ளனர். யோகி ஆதித்யநாத் அரசின் கடும் நடவடிக்கைகள் அனைவரையும் மவுனப்படுத்தியுள்ளது, பொதுச்சொத்தைச் சேதம் செய்வோர் அதற்கான இழப்பீட்டை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார், வன்முறையில் ஈடுபட்டோர் இப்போது கதறுவார்கள், காரணம் உ.பி.யில் நடப்பது யோகியின் ஆட்சி. யோகி ஆதித்யநாத்தின் சக்தி வாய்ந்த இந்த அரசைப் பார்த்து ஒவ்வொரு ஆர்ப்பாட்டாக்காரரும் யோகியின் அதிகாரத்திற்கு சவால் ஏற்படுத்தி தவறு செய்து விட்டோம் என்பதை இப்போது உணர்வார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்திலேயே ஈடுபட கூடாது என்று மிரட்டும் வகையில் இந்த ட்வீட் உள்ளதாக கூறி இதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.