உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 09.00 மணிக்குள் அலுவலகங்களுக்கு வந்து விட வேண்டும். அப்படி வரவில்லையென்றால் அந்த ஊழியர்களின் சம்பளம் 'கட்' செய்யப்படும் என அதிரடி உத்தரவை முதல்வர் யோகி பிறப்பித்தார். மேலும் சட்டப்பேரவை மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குட்கா மற்றும் பான் மசாலாவை பயன்படுத்த தடை விதித்தும், மீறி பயன்படுத்துவோருக்கு ரூபாய் 500 அபராதம் என அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்து, அமைச்சர்களுக்கு கடுமையான உத்தரவை முதல்வர் யோகி பிறப்பித்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்கள் "பரிசு பொருட்களை" கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொது மக்கள் பரிசு பொருட்களுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி பரிசு பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகள் மாநில அரசின் உத்தரவை மீறி மக்களிடம் பரிசு பொருட்களை பெற்று கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. கட்டாயமாக பரிசுகள் வாங்கி தான் ஆக வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தும் பட்சத்தில் மாநில அரசின் அனுமதியுடன் அதிகாரிகள் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.