உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளாக இருந்த ஐ.பி.சிங் கட்சியிலிருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக செய்து தொடர்பாளராக இருந்த அவர், ஆசம்கர் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் முடிவை வரவேற்று ட்வீட் செய்திருந்தார். இதனால் கோபமடைந்த அம்மாநில பாஜக தலைமை அவரை கட்சியிலிருந்து 6 வருடங்கள் நீக்குவதாக அறிவித்தது.
ஏற்கனவே கட்சி மீது அதிருப்தியிலிருந்த ஐ.பி. சிங், கட்சியின் இந்த செய்கையால் மேலும் அதிருப்தியடைந்தார். இதனால் மோடி மற்றும் அமித்ஷாவை விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "குஜராத்தின் இரு ஏமாற்றுப் பேர்வழிகள் கடந்த ஐந்து வருடமாக உ.பி.யை ஏமாற்றி வருகின்றனர்,’ ‘இவர் பிரதமரா? அல்லது தன்னை விளம்பரப்படுத்திக்கொள்பவரா?’ என பதிவிட்டார். மேலும் அதனை தொடர்ந்து, "ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடை அணிகிறார். 100 பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிடுகிறார். இந்த ஒவ்வொரு கூட்டத்தின் செலவும் ரூ.100 கோடி எனும் நிலையில் தன்னை அவர் ஏழை என்கிறார். மேலும் ட்விட்டர் மூலமாக ஒரு நாட்டின் பிரதமர் டிஷர்ட்டுகளும், டீயும் விற்பனை செய்வது சரியா?" என கேள்வி எழுப்பினார்.
மேலும் சிறிய மாநிலமான குஜராத்தின் ஆண்டு செலவிற்கான ரூ.1.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும்போது, அதை விட ஆறு மடங்கு பெரிய உ.பிக்கு வெறும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் தான் ஒதுக்க முடியுமா என கூறி பாஜக அரசையும், உ.பி.யைச் சேர்ந்தவரான மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.