ஆதார் எண் குறிப்பிடாமல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, வருமானவரித் துறை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து துபகுந்தா நாகசைலா, நித்யானந்த் ஜெயராமன் உள்ளிட்ட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது , ஆதார் அட்டையின் அரசியல் சாசன செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வருமான வரி துறையால் வழங்கப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை எனும் பான் கார்டுவுடன் ஆதார் எண்ணை இணைக்க வழங்கப்பட்ட கால அவகாசம், அந்த வழக்கின் தீர்ப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, 2018 - 19ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை ஆதார் எண் குறிப்பிடாமல் தாக்கல் செய்ய அனுமதித்த நீதிபதிகள், ஆதார் அட்டையின் அரசியல் சாசன செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தால், அதன்பின், ஆதார் எண்ணை குறிப்பிட்டு திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.