Skip to main content

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை...ஆடையின்றி 2 கி.மீ. நடந்து சென்ற அவலம்

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

uttarpradesh women incident police investigation

 

உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் நகரில் 15 வயதான சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டுள்ளார். பின்னர் காரில் இருந்த அந்த சிறுமியைத் தூக்கி வீசிய நபர்கள், அவருக்கு சிறு துணியைக் கூட கொடுக்கவில்லை.

 

அந்த சிறுமி அத்தனை துயரில் நடந்து வந்த போதும், வழியில் சென்ற ஒருவர் கூட அவருக்கு உதவ முன்வரவில்லை என்பது அதைவிட மிகவும் துயரமானதாகும். அந்த வழியே சென்றவர்கள் உதவ வரவில்லை என்பது மட்டுமின்றி, அந்த சிறுமியை அவர்கள் வீடியோ எடுத்த கொடுமையும் நடந்துள்ளது. அந்த வீடியோக்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. 2 கி.மீ., தூரத்திற்கு ரத்தம் வழிய நடந்து சென்ற அந்த சிறுமி, வீட்டிற்கு சென்ற உடனே நடந்த அனைத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, அவரின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர், அப்பகுதி காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதன் பின்னர் மாவட்ட  மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் அளித்த பின்னரே அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறுமியை பாலியல் கொடுமை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் திருவிழாவைக் காண்பதற்காக சென்றதாகவும், அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியைக் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியினர், அப்பகுதிக்கு விரைந்த நிலையில், காரில் இருந்த சிறுமியைத் தூக்கி வீசி விட்டு, அவரது ஆடையுடன் தப்பித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

15 வயது சிறுமி ஆடையின்றி சுமார் 2 கி.மீ. நடந்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்