உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்காமல், தங்களின் மொபைல் போனுக்கு 'வாட்ஸ் ஆப்'-யில் வரும் தகவல்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்கள் மீது கோபப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தின் தலைமை செயலாளர் அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் " அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். பின்பு முக்கிய பிரசச்னைகளில் கவனம் செலுத்தி விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்பார்க்கிறார்.
அமைச்சரவை கூட்டத்தில் மொபைல் போனை கொண்டு வரும் சில அமைச்சர்கள் 'வாட்ஸ் ஆப்' மெசேஜை பார்ப்பதால் கூட்டத்தில் கவனம் இருப்பதில்லை. கூட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறாமல் போகிறது. இது மட்டுமின்றி கூட்டத்தில் நடைப்பெறும் நிகழ்வுகள் மொபைல் போன் மூலம் வெளியே வரும் ஆபத்து உள்ளது. இதனால் அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்திற்கு வரும் போது மொபைல் போனை கொண்டு வர வேண்டாம்" என அமைச்சர்களை தலைமை செயலாளர் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு மொபைல் போனை அமைச்சர்கள் கொண்டு வரக்கூடாது. அதை மீறி கொண்டு வந்தால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார் முதலவர் யோகி ஆதித்யநாத்.