தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் கடந்த 18ஆம் தேதி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவர், அந்த மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசை மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும் அவர், அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். இவருடைய பேச்சு அப்போது பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது.
முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பேச்சு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில், ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்ட தாங்கள் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.