அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர்.
இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.