கரோனா வைரசால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 129 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் திருவனந்தபுரத்தில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த மார்ச் 14 ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் முரளிதரன் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். இந்நிலையில், ஸ்பெயினிலிருந்து அந்த மருத்துவமனைக்கு வந்து, அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர் ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அமைச்சர் முரளிதரன் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.