தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து யூடியூபர் மணீஷ் காஷ்யப் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அண்மையில் தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பீகார் மாநில அரசும் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உத்தரவாதங்களையும் அளித்திருந்தன. அவதூறாக வீடியோ பரப்பியதாக பீகாரைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான மணீஷ் காஷ்யப் என்பவர் சினிமா படப்பிடிப்பு போல் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி அதில் சிலரை நடிக்க வைத்து வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகளைப் படம் பிடித்து அதனைப் பரப்பியது தெரியவந்தது. தமிழக தனிப்படை போலீசார் பீகார் விரைந்து போலி வீடியோக்களை பரப்பிய மணீஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து யூடியூபர் மணீஷ் காஷ்யப் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில் போலி வீடியோக்களை பரப்பி அமைதியை சீர்குலைப்பதை ஏற்க முடியாது என்றும், தேசப் பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை ஏன் அணுகக்கூடாது? என்றும் கூறி மணீஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.