
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
பொதுவாக தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்த தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர், அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மேலும், இந்த தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பினராயி விஜயன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா என்ற பெண்ணை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கேரளாவில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு வர உள்ளனர்.