Skip to main content

“இந்துக்கள் மீதான வன்மம் வேரூன்றி இருக்கிறது” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Union Minister Dharmendra Pradhan says Animosity towards Hindus is rooted

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதனிடையே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசும்போது, “சனாதனத்தை டெங்கு மலேரியா, கொரோனா போல ஒழிக்க வேண்டும் என்று மென்மையாகத்தான் சொன்னார். மலேரியா, டெங்கு நோய்களை சமூகம் அறுவறுப்பாகப் பார்க்கக் கூடாது. ஆனால் ஒரு காலத்தில் எச்.ஐ.வி அறுவறுப்பாகப் பார்க்கப்பட்டது. ஆகையால் எங்களைப் பொறுத்தவரையில் தொழுநோய், எச்.ஐ.வி போல் சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் சனாதனத்தைப் பார்க்க வேண்டும்” என்றார்.

 

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆர். ராசாவின் கருத்து குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “ பெயரை மாற்றுவதால் ஒருவரின் நோக்கத்தையும் குணத்தையும் மறைக்க முடியாது. சனாதனம் பற்றிய மூர்க்கத்தனமான மற்றும் கொடூரமான கருத்துகளை திமுக அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இ.ந்.தி.யா கூட்டணியினுடைய இந்துக்கள் மீதான வன்மம் வேரூன்றி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் மற்றும் அதன் நண்பர்களும், உணர்வுப்பூர்வமான பாரதத்தின் ஆன்மா மற்றும் வேர்களை எப்படி களங்கப்படுத்துகிறார்கள் என்பதை நாடு பார்த்து கொண்டிருக்கிறது. சனாதனமே நித்தியமானது. சனாதனமே உண்மையானது என்பதை இந்த வெறுப்பாளர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்