Skip to main content

“பா.ஜ.க ஆட்சி அமைந்தால் ‘ராம ராஜ்ஜியம்’ உருவாகும்” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Union Minister Anurag Thakur says Rama Rajya will be establised in Rajasthan

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பா.ஜ.க சார்பில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தை எதிர்க்கட்சிகள் அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் இந்துக்களை அவமதித்து அரசியல் சட்டத்தை நசுக்க நினைக்கிறார்கள். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் தினமும் கூறி வருகின்றனர். இப்போது பத்திரிக்கையாளர்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். பயத்தினால் அவர்கள் எங்கள் மீது புகார் கூறி வருகின்றனர். 

 

ராகுல் காந்தி மற்றும் ராபர்ட் வத்ரா இருவரையும் திருப்திபடுத்துவதிலேயே அசோக் கெலாட் அரசு கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் அரசுக்கு வருவாயைப் பெருக்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். வினாத்தாள் வெளியாவது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். மேலும், ராஜஸ்தானில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்