
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் அதிக கரோனா பாதிப்புகளைப் பதிவு செய்து வரும் தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் சூரத், ஜார்க்கண்டின் ராஞ்சி, கர்நாடகாவின் பெங்களூரு நகர்ப்புறம், ஹரியானாவின் குர்கான், தமிழ்நாட்டின் சென்னை, மகாராஷ்டிராவின் மும்பை, மும்பை புறநகர், புனே, தானே மற்றும் நாக்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்திருப்பதை ராஜேஷ் பூஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த மாநிலங்கள் சிலவற்றில் கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "தொற்று மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்யவும், தாமதமாக பாதிப்புகள் கண்டறியப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலையை எட்டுவதைத் தவிர்க்கவும், கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து ராஜேஷ் பூஷன் அந்த கடிதத்தில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மேம்படுத்தப்பட்ட சோதனை போன்ற உடனடி நடவடிக்கைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், விரைவாகச் செயல்பட்டு கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், தற்போதுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கவும், மருத்துவமனை அளவிலான தயார்நிலையை வலுப்படுத்தவும் தொற்று பரவுவதைத் தடுக்க கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.