இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் சமீபத்தில் நடந்த பந்தன் வங்கியின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பேசுகையில், 2024-2025 -ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை அடைய இந்தியாவிற்கு உலக அளவிலான வங்கிகள் தேவை என்றும் மேலும் உலகளவில் முதல் 100 வங்கிகள் பட்டியலில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி மட்டுமே இடம்பிடித்துள்ளது என்றும் தெரிவித்தார். அதேசமயம் இந்தியாவைவிட சிறிய நாடுகளின் வங்கிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட அளவில் முதல் நூறு வங்கிகளின் பட்டியலில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் இந்தியாவினுடையது. அப்படி இருக்க இந்திய பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய வங்கித்துறை இருந்திருந்தால் உலகின் முதல் நூறு வங்கிகள் பட்டியலில் ஆறு வங்கிகளைக் கொண்டு தென்கொரியா இருக்கும் இடத்தில் இந்தியா இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக, உலகளாவிய முதல் நூறு வங்கிகளின் பட்டியலில் இந்தியாவின் எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் 55 -ஆவது இடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “வெளிநாட்டு மண்ணில் எவ்வாறு வெல்வது என்று நாட்டிற்குக் காட்டிய இந்திய கிரிக்கெட்டர் வீரர் எம்.எஸ்.தோனியைப் போல, இந்திய வங்கித்துறையும் இருக்கவேண்டும்.
இந்திய வங்கித்துறை வீட்டில் புலிகளாய் இருப்பதைபோல உலகளாவிய அளவில் தனது இருப்பை சீனா, அமெரிக்க நாடுகள் போன்று பலபடுத்த வேண்டும். ஆக இந்தியா தனது பொருளாதரத்தின் அளவீட்டில் ஓரளவேனும் சரிசமமாக அதன் வங்கித்துறை இருக்க வேண்டும்.”
மேலும், சீனா 18 வங்கிகளையும் அமெரிக்கா 12 வங்கிகளையும் உலகளாவிய முதல் 100 வங்கிகளில் கொண்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கைக்கொண்ட அமெரிக்கா, 20 மடங்கு அதிகமான வங்கிகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.