இந்தியாவில் ‘கோவாக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்டு’ ஆகிய இரு கரோனா தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை ஏற்கனவே நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். இந்த காணொளி ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு சமீபத்தில் திடீரென அதிகரித்துள்ளது. எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்துவிடக்கூடாது; கரோனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டும்" என்றார்.
இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை (08/01/2021) தமிழகம் வரவுள்ளதாகவும், சென்னையில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.