நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து இன்று (02/01/2022) பிற்பகல் 03.30 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மாநில அமைச்சர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிஷா, பீகார், மேற்கு வங்கம், ஹரியானா, புதுச்சேரி, டெல்லி, நாகலாந்து உள்ளிட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் இருந்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொளி மூலம் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசுகள் எடுத்து வரும் கரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விதிப்பது, நோய்த்தொற்று விகிதம், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள், சிறார்களுக்கு தடுப்பூசிப் போடும் பணிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவைக் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலெட்டர்கள் உள்ளிட்டவைக் குறித்தும், அமைச்சர் கேட்டறிந்து வருவதாக தகவல் கூறுகின்றன.