பாஜகவை சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பரக்கல பிரபாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வாங்மயி என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 2014 முதல் 2016 வரை ஆந்திர மாநிலத்தில் இருந்தும், அதற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 2014 - 2017 ஆம் ஆண்டு வரை மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2017 - 2019 வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் மகள் வாங்மயிக்கும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ப்ரதீக் என்பவருக்கும் நேற்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாஜக அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியை கூட அழைக்காமல் எளிய முறையில் திருமணம் செய்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.