2021- 2022 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்தாண்டு ஜூன் 22-ல் நிறைவடையும். நாட்டில் உள்ள 72% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மூலதன செலவினங்களுக்காக மாநில அரசுகள், அதிகார அமைப்புகளுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த ரூபாய் 2,217 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 119 கி.மீ. தூரத்திற்கு ரூபாய் 63,246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டுப் பணிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
மாநில மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 3.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தில் போட்டியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தாங்கள் விரும்பும் மின் விநியோக நிறுவனத்தில் இருந்து விருப்பமுள்ள மின் விநியோகத்தைப் பெறும் வசதி, எந்த விநியோக நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தைப் பெறலாம் என வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம். நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023- ஆம் ஆண்டிற்குள் மின்மயமாக்கப்படும்.
மேலும் 100 நகரங்களில் எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டம். மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்காக ரூபாய் 1 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49%-லிருந்து 74% ஆக உயர்த்தப்படுகிறது. அரசு வங்கிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதலாக ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு முடக்கப்பட்டால் முதலீட்டாளர்கள் சிக்கலின்றி முதலீட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூபாய் 2.23 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை விட 137% கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கி டெபாசிட் இழப்பீடு ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு (IPO) வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இரண்டு பொதுத்துறை வங்கி, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும். பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே நிலுவையில் உள்ள பல அரசு நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கை தொடரும். பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூபாய் 1.75 லட்சம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
8 அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, நல்லாட்சிக்குப் பட்ஜெட்டில் முக்கியத்துவம். வேளாண்துறையில் குறைந்தபட்ச ஆதாரவிலை நடைமுறை தொடரும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நலனில் அரசு உறுதி பூண்டுள்ளது. இளைஞர் வேலைவாய்ப்பு, பெண்கள் அதிகாரம், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்தியா, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.