நடந்து சென்றவரிடம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
மைசூரு சஞ்சீவ்ராம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரா. தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று மாலை பழைய ஆர்.எம்.பி. சாலையில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது இவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால் இவர் செல்போனில் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்றார்.
அப்போது இவர் பஞ்சமுக்கி கோயில் சாலையின் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்த போது பைக்கில் வேகமாக வந்த மூன்று மர்ம நபர்கள் இவரது கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த நாகேந்திரா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மண்டி போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படங்களை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.