அண்மையில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்து விஸ்வரூபம் எடுத்தது. இந்தியாவிலும், அரபு நாடுகளிலும் அவரின் பேச்சுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை முன்னெடுக்கும் அளவிற்கு இந்த பிரச்சனை பூதாகரமானது.
தற்பொழுது வரை இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ராஜஸ்தானில் இவ்விவகாரம் தொடர்பாகத் தையல் கடை உரிமையாளர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை வைத்திருந்த கண்ணையா லால் என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கொலையாளிகள் வெளியிட்டதாகச் சொல்லப்படும் வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கொலையைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். அங்கு பதற்றமான சூழல் நிலவிய நிலையில் நேற்று உதய்பூரில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிவந்த நிலையில் நேற்று மாலையே குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உபா பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த கொலையில் வேறு அமைப்புகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் துவங்கியுள்ளது.