யூசி பிரவுசரை தடைசெய்யப் போகிறதா இந்திய அரசு?
சீனாவின் பிரபலமான மொபைல் மற்றும் வெப் பிரவுசர் நிறுவனங்களின் ஒன்றுதான் யூசி. இது அலிபாபா நிறுவனத்தின் ஒரு கிளை. இந்தியாவில் கூகுள் குரோம்-க்கு அடுத்தபடியாக யூசி தான் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர். மொபைல் பிரவுசர்களில் முதல் இடத்திலும் தற்போது யூசி தான் உள்ளது.
இந்த பிரவுசரின் வழியாக தனிமனிதர்களின் விவரங்கள் சீனாவின் செர்வர்களுக்கு கடத்தப்படுவதாக சில தகவல்கள் வெளியாகின. இது உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில் யூசி பிரவுசர் இந்தியாவில் இருந்து முற்றிலுமாக தடை செய்யப்படலாம்.
முதலில் இதுகுறித்து டொரொண்டோ பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் மத்திய அமைச்சகம் தீவிரமாக இந்த விவகாரத்தில் இறங்கியுள்ளது.
‘மொபைல் பயன்பாட்டாளர்கள் தங்களது மொபைலில் யூசி பிரவுசரை நீக்கினாலும், பிரவுசர் வரலாறுகளை அவ்வப்போது நீக்கி வந்தாலும் கூட பல ரகசிய தகவல்கள் சீனாவின் செர்வர்களுக்கு கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது உறுதிசெய்யப்பட்டால் யூசி இந்தியாவில் இருந்து தடை செய்யப்படலாம். இதுகுறித்து யூசி நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்’ என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரி ஆங்கில ஊடகத்திற்கு பதிலளித்துள்ளார்.
இதனை யூசி செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். மேலும், பயன்பாட்டாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாகவும் அதே சமயம் ரகசியத்தன்மை இழக்காமல் இருப்பதற்காகவும் மெனக்கெடுகிறோம். ஒவ்வொரு தகவலும் என்கிரிப்ட் செய்யப்பட்ட பின்னே செர்வருக்கு அனுப்பப்படுகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் உள்நாட்டு சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறோம் என தெரிவித்துள்ளார்.
யூசி இந்திய அளவில் 100 மில்லியன் மற்றும் உலக அளவில் 450 மில்லியன் மாதாந்திர பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்