உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என அரசியல் தலைமை குழு (பொலிட் பீரோ) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், மனைவியை கைவிட்ட மோடியை ராமர் கோவில் பூஜைகளில் எப்படி அனுமதிக்க முடியும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அயோத்தியில் ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக, ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாகப் போரிட்டு மீட்டார். அப்படிப்பட்ட ராமரின் பக்தர்களான நாம், மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோவில் பூஜைக்கு அனுமதிக்கலாம்?” என்று பதிவிட்டுள்ளார்.