Skip to main content

வேளாண் மசோதாக்கள்... கண்டனம் தெரிவிக்கும் பாஜக மூத்த தலைவர்கள்...

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

ss

 

ஹரியானா பாஜக மூத்த தலைவர்களான பர்மிந்தர்சிங் துல் மற்றும் ராம்பால் மஜ்ரா ஆகியோர் மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் தரப்பில் 24 முதல் 26-ம் தேதி வரை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவிலான போராட்டங்களும் நடைபெற்றன. விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஹரியானா பாஜக மூத்த தலைவர்களான பர்மிந்தர்சிங் துல் மற்றும் ராம்பால் மஜ்ரா ஆகியோர் மத்திய அரசின் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

 

இந்த மசோதாக்கள் குறித்துப் பேசியுள்ள பர்மிந்தர்சிங், "கரோனா வைரஸ் நெருக்கடியால் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் விவசாயத்துறையே சில நம்பிக்கையைத் தந்தது. ஆனால் இப்போது, இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலைக்குக் குறைவாக விளைபொருட்களை வாங்கக்கூடாது என்று உத்தரவாதமளிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். ஒரு விவசாயி வெளியில் விற்றாலும் அல்லது எந்தவொரு தனியார் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்தாலும், குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்பதற்குச் சட்டம் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

அதேபோல மற்றொரு பாஜக தலைவரான ராம்பால் மஜ்ரா இதுகுறித்து பேசுகையில், "ஒரு தனியார் நிறுவனம் ஒரு விவசாயியுடன் ஒப்பந்தம் செய்து குறைந்தபட்ச ஆதார விலை விதிமுறையை கடைபிடிக்கப்படாமல் சர்ச்சை ஏற்பட்டால் விவசாயிகள் நீதிபதியை அணுகலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய விவசாயிக்குப் பிரச்சனை ஏற்பட்டால், அவர் ஒரு பெரிய நிறுவனத்திற்கு எதிராகப் போராடுவார் என்று எதிர்பார்க்க முடியுமா? இப்போது, நான் பாஜகவில் இருப்பதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் குரல் எழுப்ப மாட்டேன் என்று அர்த்தமல்ல. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் வேறு பல நாடுகளில் தோல்வியடைந்துள்ளன. அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்