‘ட்விட்டர்’ தளத்தின் பொது கொள்கைகளை தீர்மானிக்கும் பிரிவுக்கான தலைவரும் உலக துணை தலைவர் பொறுப்பிலும் உள்ள காலின் குரோவல் வரும் திங்கட்கிழமை இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளார் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ட்விட்டர் நிர்வாகத்திற்கும் சம்மன் ஒன்றினை அனுப்பியிருந்தது. அந்த சம்மனில், சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு வருமாறு ட்விட்டர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றையதினம் திட்டமிட்டபடி கூட்டமும் நடந்தது. ஆனால் அதில் ட்வீட்டர் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அப்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நாடாளுமன்ற குழு முன் நேரில் ஆஜராக முடியாது எனத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையில் ட்விட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்ற தீரமானம் நிறைவேற்றியது. இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் வரும் திங்கட்கிழமை ட்விட்டர் உலக துணைத் தலைவர் காலின் குரோவல் ஆஜராகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டரின் அதிகாரிகளை அழைத்தற்கு நன்றி. உலக நாடுகளின் தேர்தலின் போது கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகளைதான் இந்திய தேர்தலின்போதும் கடைபிடிக்க போகிறோம். அதன்படி ஒரு பிரத்யேக தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு ட்விட்டுகள் ட்ரெண்ட் ஆவதை கட்டுப்படுத்த உள்ளோம். அத்துடன் தவறான செய்திகளை பரப்புவர்களையும் கண்டறிய உள்ளோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ட்விட்டரின் உலக துணை தலைவர் பொறுப்பிலுள்ள காலின் குரோவல், “2019ல் நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் எங்களது நிறுவனம் முக்கியத்துவம் அளித்துவருகிறது. ஒவ்வொரு நாட்டின் பொது தேர்தல்களிலிருந்து ட்விட்டர் நிறுவனம் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொண்டு வருகிறது. அந்தவகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்..