சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் 40 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ்பால், ஷாப்ட்பால், பிளாக் புட்பால் உள்ளிட்ட 5 போட்டியைச் சேர்த்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
மேலும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரஷ்ய வீரர்கள் ரஷ்ய நாட்டின் கொடியில்லாமல் தனிப்பட்ட முறையில் வீரர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் இந்தியர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்தியா உரிமை கோரும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா செய்யும். ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவது என்பது 140 கோடி இந்திய மக்களின் கனவு. நாட்டு மக்களின் கனவை நனவாக்க அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்ற விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.