இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக நேற்று அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் இந்தியா புறப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இன்று அகமதாபாத் வந்தடைந்தனர். பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார். பாரம்பரிய கலைஞர்கள் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுவருகிறது. பின்னர் சபர்மதி ஆசிரமம் சென்று ட்ரம்ப் மற்றும் மெலனியா பார்வையிட்டனர். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் 'பாரத் மாதா கீ ஜெய்' என்று முழக்கமிட்டபடி தன் உரையை தொடங்கிய மோடி, "உலகின் பெரிய ஜனநாயகம் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் கொள்கிறது. இந்திய, அமெரிக்கா நாடுகளுக்கிடையே சிறப்பான நெருங்கிய உறவு உள்ளது. சுதந்திரத்தை போதிக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. உலகம் ஒரு குடும்பம் என்பதை இந்தியா போதிக்கிறது. சுதந்திர தேவி சிலையால் அமெரிக்காவுக்கு பெருமை. சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையால் இந்தியாவுக்கு பெருமை" என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நம்ஸ்தே என்று கூறி உரையை தொடங்கிய ட்ரம்ப், " சிறப்பான வரவேற்பு அளித்த எனது நண்பர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதளம், சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார். பிரதமர் மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, கடின உழைப்பு, பக்திக்கு வாழும் உதாரணம். இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். இந்தியா்களின் ஒற்றுமை உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியர்கள் தாங்கள் விரும்பும் எதையும் அடைந்து விடுவார்கள். சச்சின், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்களால் நீங்கள் உற்சாகமடைகிறீா்கள். இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. நட்புடன் வந்தால் வரவேற்போம்; பயங்கரவாதிகளுக்கு எங்களது எல்லை மூடப்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார்.