கரோனா நெருக்கடிகளில் இந்திய தேசமே அல்லாடிக்கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காமலும், மருத்துமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் மக்கள் செத்து விழுகின்றனர். மரணமடைந்தவர்களை எரியூட்ட முடியாமல் தவிக்கும் அவலங்கள் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. சுடுகாட்டிலும் இடுகாட்டிலும் பிணங்கள் க்யூவில் நிற்கின்றன.
இந்தியாவில் மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறதா? என கேட்குமளவுக்கு மத்திய பாஜக அரசு அலட்சியமாக இருக்கிறது என குற்றஞ்சாட்டுகின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடியும்வரை மக்களுக்கு காட்சித் தந்துவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீப காலமாக காணவில்லை. எங்கு இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் தேடிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில், அதன் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா என்பவர், நாடாளுமன்ற மார்க்க காவல்துறையினருக்கு, ஆன்லைன் வழியாக நூதனமான ஒரு புகாரைக் அனுப்பியிருக்கிறார். அந்த புகார் கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் நாகேஷ் கரியப்பா.
அந்த புகாரில், அமித்ஷாவை காணவில்லை என்று தெரிவித்துள்ளார் அவர். இதற்குப் பதில் கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், “தேர்தல்கள் முடிந்துவிட்டன. கரோனா உச்சத்தை தொடுகிறது. அமித்ஷா அண்டர்கிரவுண்டில் பதுங்கிவிட்டார்” என்று வறுத்தெடுத்துள்ளனர். இதனைப் பலரும் ஷேர் செய்துவரும் நிலையில், ‘அமித்ஷா மிஸ்ஸிங்’ என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.