இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவரும் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இந்தியா வந்த டிரம்ப் மற்றும் மெலனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதன்பின் இரண்டாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் ட்ரம்ப் மற்றும் மெலனியா ஆகியோரை வரவேற்றனர். பின்னர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் மெலனியா இருவரும் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு ஒரு மரக்கன்றை நட்ட ட்ரம்ப் பார்வையாளர் குறிப்பேட்டில் குறிப்பு எழுதினார். நேற்று அவர் சபர்மதி ஆசிரமத்தில் எழுதிய குறிப்பு இணையத்தில் கிண்டலுக்குள்ளான நிலையில், இன்று ராஜ்காட்டில் எழுதிய குறிப்பில், "மகாத்மா காந்தியின் எண்ணப்படி இறையாண்மை கொண்ட மற்றும் அற்புதமான இந்தியாவுடன்அமெரிக்க மக்கள் எப்போது ஒற்றுமையாக இருப்பார்கள். இது மிகப்பெரிய கௌரவம்" என எழுதியுள்ளார்.