கேரள மாநிலம், கொச்சி இடப்பள்ளியைச் சேர்ந்தவர் திருநங்கையான அனன்யாகுமாரி (28). சமூக செயற்பாட்டாளரான இவர், எல்.ஜி.பி.டி.கியூ (LGBTQ) அமைப்பினரின் உரிமைக்காகப் போராடியவர். மேலும், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துவந்தவர். சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஆதரவு குரலை எழுப்பியவர்.
இந்த நிலையில், அனன்யாகுமாரி கொச்சியில் உள்ள ரினோ மெடிக்கல் சிட்டியில் 2020 ஜூன் மாதம் பாலினம் மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகு இரண்டு வாரத்திலேயே அனன்யாகுமாரிக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, வலியால் துடிதுடித்துவந்தார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்குச் சென்ற அனன்யாகுமாரி, தன்னுடைய உடல்நிலையைக் கூறி தன்னைப் பரிசோதிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சம்மதிக்காததால், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவ அறிக்கையைக் கேட்டுள்ளார். அந்த அறிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை.
இதனால், அனன்யாகுமாரி தன்னுடைய நிலைமையை சக திருநங்கைகளிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். உடனடியாக திருநங்கைகள், நியாயம் கேட்டு மெடிக்கல் போர்டு விசாரிக்க வேண்டுமென்று கேரள முதல்வருக்கும், சுகாதாரத்துறைக்கும் புகார் அனுப்பினார்கள். மேலும், இதற்காக திருநங்கைகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், உணவு எதுவும் சாப்பிட முடியாமல் வலியால் அவதிபட்டுவந்த அனன்யாகுமாரி, கொச்சியில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திருநங்கைகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருநங்கை அனன்யாகுமாரி தற்கொலை மரணம் குறித்து விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையும் மருத்துவக் குழு ஒன்றும் விசாரணையில் இறங்கியுள்ளன.