கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்காக ரூ.6 ஆயிரத்து 500 கோடி வரை பா.ஜ.க. செலவழித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் ஏராளமான பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி வரை அரசியல் கட்சிகள் செலவு செய்ததாகவும், சட்டமன்றத் தேர்தலுக்காக அதிகளவு பணம் செலவானது இந்தத் தேர்தலில்தான் எனவும் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில், இந்தத் தேர்தலைக் குறிவைத்து பா.ஜ.க. ரூ.6 ஆயிரத்து 500 கோடி செலவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகத்தைத் தோற்கடிக்க முயற்சித்த பா.ஜ.க. அதன் அடாவடித் தனத்தால் தோற்கடிக்கப்பட்டது. அதனால், பணத்தை வைத்து தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க.வை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க. ரூ.6 ஆயிரத்து 500 கோடி செலவு செய்துள்ளது. இந்தியாவிலே மிகப்பெரிய பணக்கார கட்சியான பா.ஜ.க. தனது மோசமான செயல்பாடுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.