மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டம் சோட்டி ஜாம் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள், துப்பாக்கி பயிற்சி பெறும் மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மையத்திற்கு அருகே, ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 2 இளம் ராணுவ வீரர்களும், அவர்களுடன் இரண்டு பெண் தோழிகளும் வந்துள்ளனர்.
அப்போது, அங்கு அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களோடு வந்து, நால்வரையும் வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்த பின், ஒரு ராணுவ வீரரையும், பெண் ஒருவரையும் பணய கைதிகளாக பிடித்து வைத்து, மற்ற 2 பேரையும் ரூ.10 லட்சம் பணம் கொண்டு வரும்படி மிரட்டியுள்ளனர். இதில் அச்சமடைந்த அந்த இளம் ராணுவ வீரர், அங்கிருந்து வந்து இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து, கும்பலால் தாக்கப்பட்டு காயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதனை செய்ததில், இரண்டு பெண்களில் ஒருவரை துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவ வீரர்களை தாக்கி கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், அவர்களுடன் வந்த பெண் தோழியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.