உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமி பாய் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு வார்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அங்கு பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால், 10 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. 37 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தால், மேலும் சில உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால், 10 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.