ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூர் மாவட்டத்தில் உத்பால் பாலா என்பவர் கிருஷ்ணா மூல மருத்துவமனையை என்ற ஒரு கிளினிக்கை நடத்தி வந்துள்ளார். இவரிடம் மூல நோய்க்காக ஜாஷ்யா என்ற நபர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சிகிச்சைக்காக ரூ.12 ஆயிரத்திற்கும் மேலாக அவர் கட்டணமாகக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜாஷ்யாவிற்கு மூல நோய் குணமாகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜாஷ்யா உத்பால் பாலாவிடம் சென்று சிகிச்சைக்குச் செலுத்திய கட்டணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் கட்டணத்தைத் தர அவர் மறுத்திருக்கிறார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையில் ஜாஷ்யா புகார் அளித்துள்ளார். அதேசமயம் இது தொடர்பான புகார் சுகாதாரத் துறையினருக்கும் சென்றுள்ளது. பின்னர் உத்பால் பாலா கிளிகிக்கில் காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், உத்பால் பாலா எட்டாம் வகுப்பு கூட முடிக்காத போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. மேலும், 8 ஆம் வகுப்பில் தோல்வியுற்ற பிறகு 2016 முதல் 2019 வரை விசாகப்பட்டனத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றியிருக்கிறார். பின்னர் பெர்ஹம்பூர் மாவட்டத்திற்கு வந்த அவர், வாடகைக்கு வீடு எடுத்து அதில் கிளினிக் ஒன்றையும் துவங்கியிருக்கிறார்.
பின்னர் அதனை மூலம்(பைல்ஸ்) தொடர்பான நோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து வந்த உத்பால் பாலா தான் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளநிலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டு பெயர் பலகையும் வைத்திருக்கிறார். மேலும் இதன் மூலம் சில நோயாளிகளுக்கு உத்பால் பாலா அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவரான உத்பால் பாலாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.