இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டாலும், அதன் வர்த்தக ரீதியான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே அண்மையில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்துக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்தார்.
இந்நிலையில் மாடர்னா தடுப்பூசிகள், இந்த வாரத்தில் இந்தியா வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி ஜூலை 15 ஆம் தேதி முதல், மக்களுக்கு செலுத்த மாடர்னா தடுப்பூசிகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.
மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி, அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், மாடர்னா தடுப்பூசிக்கு உள்நாட்டுச் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாடர்னா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட முதல் 100 பேரின் 7 நாள் பாதுகாப்பு மதிப்பீட்டுத் தரவை சிப்லா நிறுவனம் இந்தியாவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகே மாடர்னா தடுப்பூசி முழு அளவிலான பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.