சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்ததில், எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில், தர்பூர் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேற்று இரவு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு படிக்கும் அனில் மெத்தானியா என்பவரும் கலந்து கொண்டார். அப்போது சீனியர் மாணவர்கள் சிலர், அனில் மெத்தானியாவை நீண்ட நேரம் நிற்க வைத்து ராக்கிங் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதிக நேரம் நின்றதால், அனில் மெத்தானியா நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக, அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அனில் மெத்தானியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அனில் மெத்தானியாவின் குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது. சீனியர் மாணவர்கள் செய்த ராக்கிங்கால், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.