மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியது.இந்த வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
இத்தகைய சூழலில் தான் மணிப்பூரில் ஜெரிபாம் மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் மீண்டும் வன்முறைகள் வெடித்திருக்கிறது. இதனால் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முன்னதாக மணிப்பூர் மாநிலத்தில் ஆங்காங்கே இணையதள சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இம்பால் மேற்கு, கிழக்கு, பிஷ்ணுபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மெய்தி குக்கி இன மக்களிடையே வன்முறைகள் வெடித்து வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பைரன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று (18.11.2024) மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ராணுவ உயர் அதிகாரிகளும் மணிப்பூர் விரைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் என்.ஐ.ஏ. விசாரணையைத் தொடங்கியுள்ளது. துணை ராணுவப் படை - ஆயுதக்குழு மோதல் உள்ளிட்ட வழக்குகள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தேசியப் பாதுகாப்பு செயலாளர், உள்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.