இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.
இந்த நிலையில், ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 இன்று (06-01-24) மாலை 4 மணிக்கு சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியா மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது. மிகவும் சிக்கலான மற்றும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். விஞ்ஞானிகளின் இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம், எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா கலன் ஆய்வு செய்யவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே விண்கலங்களை அனுப்பியிருந்தது. இந்தியா அனுப்பியிருந்த ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை அடைந்ததால், சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியிருந்த உலக நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது.
முன்னதாக உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்து அடுத்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.