டோகாலாம் பிரச்சனை: போர் ஒரு தீர்வாகாது - சுஷ்மா சுவராஜ் பதில்
சிக்கிம், பூடான், திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் பகுதியை டோகாலாம் என்று பூடான் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் சீனா அதை “டோங்லாங்” என்று பெயரிட்டு அழைத்து வருகிறது.
இந்த பகுதியின் பெரும்பாலான இடங்கள் இந்தியா வசம் உள்ளது. சிறிய பகுதி சீன கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சீனா, அந்த பகுதியில் இந்தியாவின் இடத்தை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. அங்கு இந்தியா 2 பதுங்கு குழிகளை அமைத்திருந்தது.அந்த பதுங்கு குழிகளை அகற்றும்படி சீனா கூறியது. அதை ஏற்க இந்தியா மறுத்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி சிக்கிம் மாநில எல்லைக்குள் நுழைந்து சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்ததால் அங்கு ராணுவத்தை இந்தியா குவித்து உள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இந்தியாவிற்கான சீன தூதர் லூ சவோஹூய்யும் சந்தித்து பேசினர். இந்தியா - சீனா இடையேயான தற்போதைய உறவுகள் குறித்து இருவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் என தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுதுறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான உறவு குறித்து ராஜதந்திரி வேலைகள் நடைபெற்று வருகின்றது. நாம் வலுவான ராணுவத்தை கொண்டுள்ளோம். யுத்தம் ஒரு தீர்வாகது. ராஜதந்திரி ரீதியாக பிரச்சனைகளை தீர்ப்பதுதான் விவேகமானது. இந்த விசயத்தில் பொறுமையாக செயல்பட வேண்டும். என பதில் அளித்தார்