பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர். தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இந்திய திரையுலகில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடைய 90வது பிறந்த நாளை கொண்டாடி மகிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.